மகிழ்ச்சி ததும்பும் ஒரு உலகைப் படைப்பதற்காகவே நாம் போராடுகிறோம். உனக்கு மரணிக்க விருப்பமா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே என் பதிலாக இருக்கும். ஒரே ஒரு தருணத்தைத் தவிர. கோடான கோடி இதயங்களில் சமூக மாற்றத்திற்கான புரட்சி நெருப்பை பற்றவைக்க முடியுமானால் ... பகத்சிங்கைப் போல, சே குவேராவைப் போல ஏகாதிபத்தியத்தை இறுதி மூச்சு வரை நடுநடுங்கச் செய்ய முடியுமானால். நான் சாக விரும்புகிறேன். அவர்களைப் போல. ! (இன்று செ குவேரா நினைவுதினம்)

இங்கே எத்தனை திருடர்கள் தோன்றியிருக்கிறார்களோ, அவர்களைக் காட்டிலும் நூறு மடங்கு திருட்டுக்கு எதிரிகளும் தோன்றியிருக்கிறார்கள். எத்தனை அயோக்கியர்கள் தோன்றியிருக்கிறார்களோ, அதே அளவு நேர்மையும் வளர்ந்து வருகிறது. எத்தனை குழப்பவாதிகள் உருவாகியிருக்கிறார்களோ அவ்வளவு தெளிவான சிந்தனைகளும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தனவோ, அதே அளவு வாழ்க்கையின் மீதான பிடிப்பும் உறுவாகியிருக்கிறது.

சுயநலமிகள் எத்தனை மோசமாக நடந்து கொள்கிறார்களோ அத்தனை வேகத்துடன் பொது நலம் திருப்பித்தாக்கும். வரலாறு அத்தகைய தாக்குதலைக் காட்டியிருக்கிறது. எப்படி சோவியத் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி உலகம் முழுவதும் புரட்சி விதைகளைத் தூவியதோ, எப்படி கியூபா என்ற சின்னஞ்சிறு தேசத்தின் வெற்றி லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் ஆன்மாவை உலுக்குகிறதோ, எப்படி துனீசியாவில் எழும்பிய முழக்கம் எதேச்சதிகார ஆட்சியாளர்களுக்கு சவால் விட்டு பரவியிருக்கிறதோ ... அப்படி ஒரு மாற்றத்தை நம் தலைமுறை சாதிக்கும்.

இதே இந்தியா, ஏற்றதாழ்வுகளின் அடையாளமாக அறியப்படுகிற நம் தேசம், தனது வருங்காலத்தை சூனியத்திடம் விட்டிருக்கவில்லை. மாறாக, நம்மைப் போன்ற ஏராளமான இளைஞர்களிடம் விட்டிருக்கிறது. கல்வியில், வேலைவாய்ப்பில், சுற்றுப்புற சூழல்களில், மொழியில் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தாலும் நம்மிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, எல்லோருக்குமான நல்ல வாழ்க்கை கிடைக்கச் செய்யும் கனவு.

நாம் நம்பிக்கையை ஏந்துவோம். நெருப்பைப் போல நிமிர்ந்தே எரிவோம்.

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக உறுவாகியுள்ள மனப்பான்மையை, முதலாளித்துவ ஏகபோகத்திற்கு எதிரானதாக வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் திமுகவுக்கு மாற்றாக அதிமுக ஆட்சி என்ற சிந்தனையில் உடைப்பை ஏற்படுத்தி. ஒற்றைக் கட்சியின் ஏகபோகத்திற்கு மாற்றாக குறிப்பிட்ட செயல்திட்டத்தின் மீதான கூட்டணி என்பதை ஏற்படுத்த முடியும்.

மேற்கண்ட கேள்வி. நண்பர் நிர்மல் கள்ளச்சாராயக் கும்பலை எதிர்த்த கம்யூனிஸ்ட் வெட்டிக் கொலை ! என்ற பதிவில் கேட்டது.

நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக முயற்சி செய்துகொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். வருக நண்பரே ... ஆனால் ஒரு விசயம், மார்க்சியம் என்பது போராட்டங்களில் இருந்தும், மக்கள் அன்றாட வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வைத் தேடுவதிலிருந்தும் கற்க வேண்டியது. எனவே, சில விளக்கங்களின் மூலம் ஒரு கம்யூனிஸ்டாக மாறிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால். மன்னிக்கவும், அது சாத்தியமற்றது.

கள்ளச்சாராயக் கும்பலை ஏன் எதிர்க்க வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உழைக்கும் வர்க்கத்தில் அன்றாட வாழ்க்கைப் பாட்டை இவர்கள் மேலும் சிக்கலாக்கி வருகிறார்கள். மேற்கண்ட கும்பலினால் சாதாரண மக்கள் துன்பத்திற்கு ஆளாகும்போது.  அவர்களை தடுக்க வேண்டிய சட்டமும் கைவிரித்தபோது தோழர்கள் களத்தில் இறங்கினார்கள்.

அதனால சமுகத்துக்கு / அரசாங்கத்துக்கு என்ன பலன்?
கள்ளாச்சாராயத்தை எதிர்ப்பதே கட்சியின் கொள்கையாக வைத்து செயல்பட்டால் நீங்கள் இப்படிக் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் இந்த அரசமைப்பின் மக்கள் விரோதச் செயல்கள் ஒவ்வொன்றையுமே எதிர்த்து வருகிறோம். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உழைக்கும் வர்க்கத்தில் உடனடிப் பிரச்சனையாக முன்னுக்கு வரும் பிரச்சனைகளின் உடனடி தலையீட்டைச் செய்கிறோம். அப்படியாக, தேவையை ஒட்டி இத்தகைய சமூக விரோதக் கும்பல்களை எதிர்க்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும்.

சாராயத்தில் என்ன, நல்லது / கெட்டது?
சாராயத்தில் நல்லது என்று சொல்ல முடியாது. சாராயம் ஒரு பண்டமாக இருப்பது சமூகத்தின் பிரச்சனை. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. சமூக மாற்றமே போதையற்ற வருங்காலத்திற்கு வழிவகுக்கும்.


அன்புள்ள முகமது ஆசிக் ...

மதம், மத நம்பிக்கை என்பவை வேறு. மதை அடிப்படை வாதம் என்பது வேறு. நீங்கள் சொல்லும் கருத்துக்களில் பலதை இஸ்லாத் முன் வைக்கலாம், ஆனால் அக் கருத்துக்கள் இஸ்லாத் மட்டுமே முன்வைத்தவை அல்ல. மற்றொன்று நீங்கள் சரியென நினைக்கும் விசயம் எனக்கு தவறாகப் படலாம். ஏன். இரண்டு முஸ்லீம்களின் தங்கள் மதம் குறித்த புரிதல் கூட வேறு வேறாக இருக்கலாம்.

அந்த வேற்றுமைகளை மதித்து. உரிமையை மதித்து. என் கூடாரத்துக்குள் உங்கள் மூக்கு நுழையாமல் வாழ்வது. நல்ல வாழ்க்கை.

அப்படியான நிலை தொடர. அனைவருக்கும் பொதுவான விசயங்களில் இந்த நம்பிக்கை அடிப்படை வாதம் புகுந்துவிடாமல் தடுப்பது அவசியம். அதுதான் மதச்சார்பின்மை.

உங்கள் மத நம்பிக்கை உங்களை மனிதனாக்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், மத அடிப்படைவாதம் அப்படிச் செய்யாது. அது வெறியைக் கிளப்பி, பாசிச அழிவுக்கு இட்டுச் செல்லும். அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.

பிரபலமானவை...